விருத்திசார் தாமதம் என்றால் என்ன?
“தாமத விருத்தியுள்ளவர்கள்” என இனங்காணப்பட்ட சிறுவர்கள், அதே வயதுடைய வழக்கமான சிறுவர்களைவிட, ஒரு குறைவான வேகவீதத்தில் வளர முற்படுவர். வளர்ச்சியின் ஒரு பகுதியில் அல்லது பல பகுதிகளில் இது வெளித்தெரியலாம். வளர்ச்சியில் தாமதம் என்பது முன்பள்ளிச் சிறுவர்களை ஒரு ஆணித்தரமான அடையாளக் குறிப்புடன் அடையாளப்படுத்தத் தயங்கும் கல்வியாளர்கள், ஆரோக்கியத் தொழில் துறையாளர்கள் ஆகியோரால் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஆணித்தரமற்ற ஒரு அடையாளக் குறிப்பாகும். வழக்கமான வளர்ச்சியிலும்கூட, வளர்ச்சி மைல்கற்களுக்கான வயதெல்லைகள் உள்ளன. எனினும் பெரும்பாலான சிறுவர்கள் ஒவ்வொரு திறனையும் கைக்கொள்வதற்கென ஒரு குறிப்பிட்ட புள்ளி உண்டு.
இது எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது?
ஒரு பிள்ளை ஏன் தாமதமான விருத்தியைக் கொண்டிருக்கக்கூடும் என்பதற்கான பொதுவான காரணங்கள்:
- முன்கூட்டிய / முதிராத பிறப்பு
- பிறந்தவுடன் அல்லது பிறப்பின் பின் விரைவாக மருத்துவமனையில் சேர்ப்பு
- பற்றாக் குறையான மூளைக்கல வளர்ச்சி
- மூளைச்சேத முடக்கு வாதம் (Cerebral Palsy) – பிறப்பின்போது அல்லது அதற்கு முன்னராக மூளைக்கலங்கள் சேதமடைதல்
ஒரு வளர்ச்சித் தாமதம் பின்வருவன போன்ற இன்னொரு கோளாறுடன் இணைந்து காணப்படுதல் அசாதாரணமானதல்ல:
- நடத்தை மற்றும் மனோவெழுச்சிசார் ஒழுங்கீனங்கள் – இயற்கையாய் அமையப் பெற்றவை அல்லது இளம் பராயத்து உடலியல், பாலியல் அல்லது மனோவெழுச்சிசார் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடையன.
- புலனுறுப்புக் குறைபாடுகள் – பார்த்தல் அல்லது கேட்பதில் சிக்கல்கள்
- மருத்துவ/ஆரோக்கிய நிலைமைகள் – ஒவ்வாமைகள் அல்லது தொய்வு (ஆஸ்துமா)
- பரம்பரைக் கோளாறுகள் (டவுணின் உள-உடல் முடக்கப் பிணிக்கூட்டு -Down’s syndrome)
- அவதானப் பற்றாகுறைக் கோளாறு (Attention Deficit Disorder)
பாதிக்கப்படுபவர் யார்?
வளர்ச்சித் தாமதம், முன்பள்ளிச் சிறார்கள் மத்தியில் வெகுசாதாரணமாக காணப்படும் இயலாமையாகும். பெண்பாலாருடன் ஒப்பிடும்போது ஆண்பாலாரிடத்தே இது அதிகம் காணப்படுகிறது. பாடசாலை அமைப்புக்குள் சிறுவர்கள் உட்செல்லும்போது பலரிடத்தும் மேலும் குறிப்பிட்ட இயலாமைகள் கண்டறியப்படுகின்றன. அநேகமான சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் வளரவளரமுன்னேற்றம் அடைகின்றனர். ஆயினும் அம்முன்னேற்றத்தின் வீதமும் இறுதி எல்லையும் தனிநபர்கள் மத்தியில் மாறுபடுகின்றது.
இது எவ்வாறு கண்டறியப்படுகிறது?
வழமைபோல் வளர்ந்துவரும் சிறுவர்களின் ஒழுங்குமுறையான பரிசோதனைகளின்போது, அவர்களது வளர்ச்சித் தாமதம் குறித்து, ஒரு குழந்தை வைத்தியர் கண்காணிக்க வேண்டும். ஒரு குழந்தையால் என்ன செய்ய முடியும் என்பது போன்ற எளிமையான கேள்விகளை இது கொண்டிருக்கலாம் அல்லது ஒரு முறையான மதிப்பீட்டுப் பரிசோதனை ஒன்றை உள்ளடக்கலாம்.
ஒரு தாமத வளர்ச்சியுடனான பிள்ளையில் வெளித்தெரியக்கூடிய பொதுவான பண்புகள்:
- மாற்றத்தின்போது அல்லது மாறுதல் காலங்களில் சிரமம் ஏற்படுதல்
- செயல்பாடு ஒன்றில் தொடர்ந்து இருப்பதில், மற்றும் அதனைப் பூர்த்தி செய்வதில் சிரமம் எற்படுதல்
- உருவமுள்ளதுக்கு மாறாகக் கற்பனைசெய்ய வேண்டிய எண்ணக்கருக்களை விளங்கிக்கொள்வதில் சிரமம் கொண்டிருத்தல்
- தன்னை வெளிப்படுத்தும், மற்றும்/அல்லது உள்ளேற்கும் மொழி வளர்ச்சியில் தாமதங்கள்
- தகவல்களை ஒழுங்குபடுத்துவதில் மற்றும்/அல்லது ஞாபகப்படுத்துவதில் சிக்கல்கள்
- கட்டமைப்பற்ற செயற்பாடுகளின் போது சிரமப்படல்.
மேலதிக மூலவளங்கள்:
பிள்ளைகளை ஆரோக்கியமாக வைத்திருங்கள் எனப் பொருள்படும் Keep Kids Healthy – www.keepkidshealthy.com இணையத்தளம்
Keep Kids Healthy என்பது ஒரு மருத்துவ, பெற்றாரிய இணையத்தளமாகும். உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கும் பாதுகாப்புக்குமான, குழந்தை வைத்தியரின் ஒரு வழிகாட்டியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் பிள்ளையின் வைத்தியரிடமிருந்து நீங்கள் பெறும் தகவல்களுக்கு, தடுப்புப் பராமரிப்பினூடான மேலும் சிறந்த ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலான ஒரு பின்னிணைப்பாக இது ஆக்கப்பட்டுள்ளது.
கனடா பிள்ளை மற்றும் குடும்பம் – Child and Family Canada – www.cfc-efc.ca
Child & Family Canada ஒரு தனித்துவமான கனடிய பொதுசனக் கல்வி இணையத் தளமாகும். இலகுவாகச் சென்று பார்வையிடக்கூடிய இணையத்தளத்தில் பிள்ளைகள் மற்றும் குடும்பங்கள் பற்றிய தரமான, நம்பகரமான மூலவளங்களை வழங்கும்பொருட்டு, Child & Family Canada பதாகையின்கீழ் ஐம்பது இலாப நோக்கற்ற அமைப்புக்கள் ஒன்றுதிரண்டுள்ளன.
இந்த ஆவணத்தின் உள்ளடக்கம் பொதுவான தகவல் வழங்கும் நோக்குடையது. ஒரு குழந்தையின் நோயைக் கண்டறியும் அல்லது அதற்குச் சிகிச்சை அளிக்கும் நோக்குடையதல்ல.